எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Monday, October 9, 2017

கடமை - பூவிழி (க க க போ 4)


கடமை
பூவிழி‘அப்பா.. போதும்பா நீங்க தனியா இங்க இருக்கறது.. எங்களோட வந்துடுங்க.’  வாசு அப்பாவிடம் இறைஞ்சினான்.

‘வேணாம்டா.  இங்கயே இருந்துட்டேன். இங்கயே போயிடறேன்டா. வானதியோட எப்போவும் தொடர்புல இருடா. அவளுக்கு உங்க அரவணைப்பு அவசியம்’, சுவாமினாதன் சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டு கண்ணைமூடினார்.

வாசுவுக்கு அப்பாவை அந்த நிலையில் பார்ப்பது வருத்தமுறச் செய்தது. கண்ணில் நீர் வருவது அப்பாவுக்குப் பிடிக்காது என்று அடக்கிக்கொண்டான். வசுமதி அவன் கையைப் பிடித்துக்கொண்டாள்..

        ஆச்சரியமாய் இருந்தது வாசுவுக்கு தன்னிடம் இவ்வளவு வார்த்தைகள் பேசினாரா என்று. ஏனென்றால் அவனும் இதுவரை அவருடன் அதிகம் பேசியதில்லை…  அவரும் பேசியதில்லை. அவன் பிறந்ததிலிருந்து அவரை தள்ளியிருந்தே பார்த்திருக்கிறான்.  ஒருநாளும் அவர் அவனைத் தொட்டதில்லை என்று கூட சொல்லாம்.  காரணம் அவர் வேலை அன்று அருவருப்பாகவும், வெட்கமாகவும் தோன்றியது.  இன்று அவனைக் கூனி குறுக வைக்கிறது.

அவனின் நிலையை பார்த்து வசு "மாமா நீங்கள் ரிடையர் ஆகும் வரைதான் வேலையைக் காரணம் சொல்லி போக்குவரத்தே இல்லாமல் இருந்தீர்கள்.   இப்போது ரிடையர்  ஆகி 5 வருஷம் ஆகிவிட்டது. உங்களுக்கும் வயதாகிவிட்டது .  உடம்பு வேறு சரியில்லை.  ஜம்புலிங்கம் ஊருக்கு வந்த  போது மிகவும் வருத்தப்பட்டார்.  அதைக் கேட்டதில் இருந்து அத்தை மனசொடிந்து போயிட்டாங்க சரியாக சாப்பிடுவது கூட இல்லை" என்று நயந்த குரலில் சொல்கிறாள்.

அதைக் கேட்ட சுவாமிக்கு வாசு வந்ததன் விஷயம் புரிகிறது.  இருந்தும் அவன் முகத்தின் வருத்தம் அவரைப் பேச வைத்தது.  தலைகுனிந்து நிற்கும் மகனின் வேதனை அவருக்குள் வருத்தத்தை கொடுக்கிறது.  “யாரு ஜம்புவா?  அவன் ஒரு லூசுப்பய..  எதனா பேசுவான்..  எனகென்ன?  நான் நல்லாதான் இருக்கேன்…  நீங்க கிளம்புங்க.  இருட்டிடுச்சினா  ஊரு போயி சேர்ந்து, வீட்டுக்கு போவ கஷ்டமாகிட போகுது!  பசங்களைச்  சமாளிக்க அவளுக்குக் கஷ்டமாயிடும்.  நாளைக்கு திங்கக்கிழம வேற வேலைக்கு போவணுமில்ல”  


வெடுக்கென்று நிமிர்ந்து அவரைக் 
கண்கலங்கலோடு 

பார்கிறான்.

   அது ஒரு மத்தியான நேரம். புறம்போக்கு நிலத்தில் பலவீடுகள்.  அங்கு சின்ன குடிசைகளாய் ஆக்கரமிக்கப்பட்ட இடம்.  இங்கு இவர் இருப்பதும் ஒரு சின்ன குடிசை.  2 பேர் படுக்க அதிகமாய் இடமில்லாத இடம்.  சரியான ரோடு இல்லாத ஊரின் எல்லைப் பகுதி.  போவோர் வருவோர் அவர்களைப் பார்த்து கொண்டே - பார்ப்பதற்கென்றே நடை பழகுகிறார்கள்.  அவர்களின் உடைகளின் நேர்த்தி அவ்வாறு பார்க்க வைக்கிறது. வாசு செங்கல்பட்டு  EB யில் வேலை செய்பவன்.  வசு ஒரு ஸ்கூல் டீச்சர்.   செங்கல்பட்டில் வேலை.  இவர் இருப்பதோ சென்னை வில்லிவாக்கத்தில் …"கிளம்புங்க குழந்தை அழப்போறான்….  நான் அடுத்த மாதம் வருகிறேன் என்று வானுவிடம் சொல்லிவிடுங்கள்…." அவரின் பிடிவாதத்தைப் பார்த்து பேசத்தெரியாமல் கிளம்புகிறார்கள். வாசுவும் வசுவும் செங்கல்பட்டுக்கு டிரெயின் ஏறியவுடன் வாசுவின் எண்ணமும்  அவர்களை அனுப்பிய பின் சுவாமியின் எண்ணமும் பின்னோக்கி நகர்கிறது.அவர் இந்த சென்னைக்கு வந்து இந்த வேலையில் அப்போது சேர்ந்திருந்த  நேரம்….  ஒரு இரவு பிராட்வே பஸ்டேன்ட் அருகே ஒரு பெண்ணை இரண்டு பேர் பலவந்தப் படுத்தி ஆட்டோவில் ஏற்றிக் கொண்டிருந்தைப்  பார்த்து அந்த பெண்ணை  விடுவிக்கிறார்.  அந்த பெண்  அழகானவளாய்  இருந்தாள்.  சினிமாவில நடிக்கும் ஆசையில் வீடு விட்டு ஓடிவந்தவள்.. சீரழிந்தவளாய்,  திக்கு தெரியாமல் மீண்டும் தன் கிராமத்திற்கே சென்றுவிட,  பாவிகளிடமிருந்து தப்பித்து பஸ்டேன்ட் வரும்போது இவரால் காப்பாற்றப்படுகிறாள்.  அவள்  மிக வசதியானவள், இழிந்து போனநிலையில் ஊருக்கு திரும்புவதை அவள் வெறுக்கிறாள்.   
ஏனோ அவருக்கு அவள் ஆதரவு அற்ற நிலைமை மனதை உருக்க,  அவளை மணம் புரிகிறார்.  அவளும் ஆதரவு வேண்டிய நிலையில் சம்மதிக்கிறாள்.  அப்போது  அவர் வேலை அவளுக்கு மனதிற்கு அசூயையை  கொடுக்கவில்லை.  அவள்  வாழ ஆரம்பித்தவுடன் அவர் வேலை பிடிக்காமல் போகிறது.  அதை வெளியே காண்பிக்காமல் மனதிற்குள்ளேயே  வைத்துக் கொள்கிறாள்…..  மௌனமாக  தன் தகுதியை நினைத்து.  இவரோ அவள் தன் நிலையை நினைத்து இப்படி இருக்கிறள்….  போகப் போக சரியாகிவிடுவாள் என்று நினைத்து கொள்கிறார். 


ஒரு ஆண்மகவு  பிறக்கிறது  அவரின் உள்ளும் புறமும் சந்தோஷத்தில் திளைக்கிறது.  குழந்தை நல்ல  அழகு அவளைப்போல்.  தூக்கி கொஞ்சிட தன் தோளிலேயே வைத்து கொள்ள குதிக்கிறார். ஆனால் அவளோ  அவருக்கும் தெரியாமல் அதைத் தடுக்கிறாள். முதலில்  உணராதவர் போகப் போக அவர் அதை உணர்கிறார். ஏன்? என்று கேட்டிருக்கிறார்.  பணியை அவள் காரணம் காட்டுகிறாள்.  குழந்தைக்கு உடம்புக்கு முடியாமல் போகலாம். விலகி  நிற்கச் சொல்கிறாள்.  திகைத்துப் போகிறார் . இப்பொழுது இவர் மௌனியாகி விடுகிறார்.  தன் பிள்ளையை எட்டி நின்றே ரசிக்கிறார்.  பாசத்தால் அவர் மனம் துடிக்கிறது.. தன் குழந்தையை அள்ளிக் கொஞ்ச முடியவில்லையே என்று.....  

மெல்ல மெல்ல அவள் குழந்தையைக் காரணம் காட்டி 'தனியே இருந்து கொள்கிறேன்' என்கிறாள். 'நீங்கள் வந்து போங்கள் குழந்தையை நன்றாகக வளர்க்க விரும்புகிறேன். அவனுக்கு உங்கள் வேலை தொந்தரவாக இருக்க வேண்டாம்...'  சொல்லியே விடுகிறாள். 

பாவம் சுவாமி. தன் பிள்ளையின் மேல் வைத்த பாசத்தால் ஒத்துக் கொள்கிறார்.  அவள் விருப்பப்படி நல்ல ஒரு வீடு  பார்த்துக் கொடுக்கிறார். பிள்ளையை நன்றாக வளர்க்க தன் சம்பளத்தின் பெரும் பகுதியைக் கொடுத்து விட்டு ஒரு ரயில்வே ஸ்டேஷனில் உதவி கொண்டு அங்கேயே படுக்கைக்கு இடம் அமைத்து  கொள்கிறார்.  பிள்ளை  வளருகிறான்.  அவனும்  அப்பாவின் வேலையில் முகம் சுளித்து,  'அம்மா இப்படி இருப்பதின் காரணம் அதுதான்' என்று ஒதுங்கிப் போகிறான். அவர் அவனைப் பார்க்க வரும் நேரம் ஒளிந்து கொள்வான். இல்லை விளையாட போய்விடுவான். 
பிள்ளையின் அருகில் அவரை அண்ட விடாமல் அவளும் பார்த்துக் கொள்கிறாள். பணம் மட்டும் குடும்பம் நடத்த  பெற்று கொள்கிறாள்.  அவள் மனசாட்சி உறுத்துகிறது.  நாள் ஆக நாள் ஆக, அவர் வரும் போது அவருக்கு வேண்டிய உணவைப் பார்த்துப் பார்த்து சமைத்துப் போடுகிறாள்.  வாசுவை அவர் வரும் நேரம் வீட்டில் இருக்கும் படி வைக்கப் பார்க்கிறாள்.  


அவர் பார்த்தாவது  மனம் சந்தோஷப் படட்டும்…. பேசினால் பேசட்டுமென்று.   ஆனால்  இருவருக்குமான இடைவெளியில் மௌனமே ஆட்சி  செய்கிறது.  அவளும்  தையல் கற்று கொண்டு பிள்ளையை வளமையாய் வாழ வைக்க உழைக்கிறாள்.  பிள்ளையின் படிப்பை கவனமுடன் பார்த்து கொள்கிறாள்.  பிள்ளையே உலகம் என்று  அருகில் இருந்து அவளும், வராமல் அவரும் வாழ்ந்து வருகிறார்கள்.  வாசுவும் நன்றாகப் படிக்கிறான். அம்மாவின் சொல்பேச்சு கேட்டு நல்லவனாய் வளர்கிறான். அப்போது அவள் தன் தவறு தெரிய கூடாது என்று அவருக்கு வேறு ஒரு குடும்பம் இருப்பதாக கூறி விடுகிறாள்.  இதைக் கேட்டு வாசு அவர் தன்னை  பார்க்க 
விரும்புவதைக் கூட   தவிர்த்து விடுகிறான்


காலம் ஓடுகிறது. வாசு கல்லூரியில் சேரும் வயது வந்துவிட்டது.  வானதி குற்ற உணர்வில் தவிக்கிறாள். அப்பாவும் பிள்ளையும் பிரிந்திருக்க தான் தான் காரணம் என்று…  இருந்தும் பிள்ளையின் அந்தஸ்தான வாழ்க்கைக் கனவில் மௌனத்தையே கடைபிடிக்கிறாள்.

   சுவாமி ஒரு யோகி  போல் வாழ்கிறார்.  வாசுவை உயர்ந்த பள்ளியில் படிக்க வைக்கக் கடன்கள் வாங்குகிறார்.  மேலும் இப்பொழுது 'மேல் படிப்பையும் நன்றாய்ப் படிக்கச் சொல்.  நான் பார்த்துக் கொள்கிறேன். செலவைப் பற்றிக் கவலை வேண்டாம்’  என்று வானதியிடம் சொல்கிறார் .  வாசுவின் மனம் ரோஷம் கொள்கிறது.  


'அவரின் இரக்கம் எனக்கு வேண்டாம்' என்று வீம்பாய் பல பரீட்சைகள்  எழுதுகிறான். மின்சாரவாரியத்தில் வேலைக்குச் சேர்கிறான்.  ஒரு கிறிஸ்துவப் பெண்ணை காதலிக்கிறான். அம்மாவிற்கு விருப்பமில்லாவிட்டாலும் அவளை மணந்து  கொள்கிறான். அவளும் ஒரு அரசாங்க பள்ளியில் டீச்சர்.  இவன் அழகில்  மனதைப் பறிகொடுத்து தன் வீட்டினாரின் அனுமதியோடு  மணந்துகொள்கிறாள்.   அவளுக்காக. வாசுவும் மதம் மாறுகிறான்..   தன் திருமணத்தில் தன் அப்பாவின்  அறிமுகத்தைக் காண்பிக்க விரும்பவில்லை.  அம்மா தமிழ் என்பதால் பெண்வீட்டு மனிதர்கள் அவளின் வரவை விரும்பவில்லை.   இப்பொழுது  வானதி மிகவும் துடித்து போகிறாள். தான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம்? 


வாழ்வுப் பிச்சை போட்டவரை  தள்ளி வைத்ததற்க்கு  உரிய தண்டனை கிடைத்துவிட்டது தனக்கு என்று சுவாமிக்கு தெரிவித்து அழுகிறாள்.  தன்னை மன்னித்துவிடும் படி கேட்கிறாள்….  சுவாமி அவளை சமாதானப்படுத்தி விட்டு சென்றுவிடுகிறார்.  தன் மகனிடம் தன் வாழ்வில் நடந்த விஷயங்கள் அப்பாவின்  தியாகம் எல்லாம் சொல்கிறாள்.

அவன் திடுக்கிட்டுப் போகிறான்  “ஏன் அம்மா அவரை வேற வேலைக்குப் போக சொல்லி இருக்கலாம் அல்லவா?  உங்கள் விருப்பத்தைக் கூறி இப்படி செய்துவிட்டீர்களே! எனககும் அவர் வேலை பிடிக்காமல் போனதும் அவருக்கு வேறு குடும்பம்  இருக்கு,  அவரை இவ்வளவு காலம் தவிர்த்து விட்டேனே“ என்று துடிக்கிறான்.  மெல்ல அப்பாவின் நிலையை உணர்கிறான்.  இருந்தும் விலகல் அவனை நெருங்க விடாமல் தடுக்கிறது. வானதி உடைந்து போகிறாள். 


 மருமகளின் விட்டு மனிதர்கள் அவளைத் தள்ளி  வைக்கச் சொல்லி  வசுவை தூண்டுகிறார்கள். 'நாங்கள் வர வேண்டுமென்றால் அவளைத் தள்ளிவை' என்கிறார்கள்.  அதுவும் அவளின் கதையும் அப்பாவின் வேலையும் தெரிந்தவுடன் மேலும் மேலும் தொல்லை கொடுக்கிறார்கள்.  வசுவும் வாசுவும் தர்ம சங்கடத்தில் தவிக்கிறார்கள்.  வானதியும் தவிக்கிறாள். அதை உணர்ந்து  ‘தனியே இருந்து கொள்கிறேன்’ என்று வாசுவை சமாதன படுத்தி வீட்டுக்கு எதிரில் இருக்கும் வீட்டின் மாடியில் உள்ள ரூமில் வசிக்க ஆரம்பிக்கிறாள்.


வாசுவுக்குக் குழந்தை பிறக்கிறது.  சுவாமி ரிடையர் ஆகிவிடுகிறார். இப்பொதும்  வந்து வானதிக்கு  பணம் கொடுத்து பார்த்துவிட்டுப் போகிறார். இப்பொழுது வானதி தங்கச் சொன்னாலும் தங்குவதில்லை "பரவாயில்லைம்மா பேரக்  குழந்தைக்கு ஆகாது. நான் பிரிந்தே இருக்கிறேன். எனக்குப் பழகிவிட்டது”  என்று சொல்லிவிடுகிறார்.வசுவும் நல்லவள். ஆனால் தன் வீட்டினரை ஒதுக்கிவைக்கப் பிடித்தமில்லாமல் இருக்கிறாள். வசுவுக்கும் வருத்தமா இருக்கிறது.  வாசுவிடம் சொல்கிறாள் “நீங்க கூப்பிட்டா ஒரு வேளை அவர் சமாதானமாகி அத்தையுடன் இருக்க வரலாம். வாங்க நாம் போயி கூப்பிடுவோம்“…..  வாசுவுக்கு தர்ம சங்கடமாய் உணர்கிறான்.  இவ்வளவு நாள் அவரிடம் பேசாமல் இருந்துவிட்டு இப்பொது தன் சுயநலத்திற்காக அவரை தேடிப் போவதா என்று.அந்த நேரம் 


வானதியைத் தேடி 

 ஜம்புலிங்கம் வருகிறார்.  அவர் சுவாமியின் நண்பர். ஒன்றாய் இருந்த பொழுது அடிக்கடி வந்து பார்த்து போவார். அப்பொழுது ஓரிருமுறை பேசிப் பழக்கம் வந்த பின்பு 'எப்போது இந்த ஊருக்கு வரும் போதும் வாசு கொடுத்து விடச் சொல்லும் பொருளைக் கொடுத்து விட்டுப் போவார்.


" என்னம்மா  எப்படி இருக்கே? பேரன் சவுக்கியமா?" என்று விசாரிக்கிறார்.  

"வாங்க   நீங்க எப்படி இருக்கீங்க? உட்காருங்க"  
"இல்லயமா ஜோலி இருக்கு. பாரிமுனை  வந்தேன் பொருள் எடுக்க, சுவாமி குழந்தைக்கு 2 விளையாட்டுப் பொருள் வாங்கிக் கொடுத்து விட்டு வரச் சொன்னான்,.. அதுதான். இந்தாம்மா ....  அம்மா அவன் எப்பொழுது இங்கே கடைசியா வந்தான்" 

  
"அவராண்ணா? போன மாதம் 5 தேதி வாக்கில் வந்தார்" 

"அப்படியா அப்போ போகும் போதுதான் நடந்து இருக்கனும்" 

வானதிக்குப் பதட்டமாகிறது.  "என்ன என்னவிஷயம்?"


"ம்ம்.. அவனுக்கு ஹார்ட் அட்டாக் வந்து இருக்குமா... இங்கிருந்து போகும் போது வழியிலேயே மயங்கி விழுந்து இருக்கான். பக்கத்தில் இருந்த ஆட்டோகாரன் கொண்டு போயி ஆஸ்பத்தியில சேர்த்திருக்கான். அப்புறம் தான்  எனக்குத் தகவல் வந்து, நான் அங்கு போனேன்.  உனக்குத் தெரியாது இல்லையா? அதான்  நான் சொன்னேன். ஆனா நான் சொன்னதாச் சொல்லாதம்மா.. கோவிச்சுக்குவான்.  சரிம்மா நான் கிளம்பறேன் நேரம் ஆச்சு " 

வானதி கண்ணில் இருந்து கண்ணீர் வழிகிறது. 

திக்கித் திணறி  "இப்போ எப்படி இருக்கார்ணா?" 

அவரைப் பார்த்துவிட்டு தன் வீட்டில் இருந்து வாசு பரபரவென வெளியே வருகிறான்.  அவரிடம் என்ன பேசுவது என்று புரியாமல் அம்மாவின் கையைப் பிடித்து கொண்டு நிற்கிறான்.

"வாப்பா நல்ல இருக்கியா? ம்ம்..  இப்ப பரவாயில்லைமா.. அடுத்த தடவை வரும் போது விசாரிமா.. இப்பதான் வேலைக்கூட இல்லையே..... அவனெல்லாம் தெய்வம்மா.. ஊரையெல்லாம் குப்பையில்லாம கீளின் பண்ணி சேவை செஞ்சவன்ம்மா..  ம்ம்.... என்னமோ அவன் வாழ்க்கையை  இப்படி ஆக்கிட்டான் அந்த முருகன்....  அவன் கடமையை அவன் எல்லா இடத்திலும் சரியாதான் செஞ்சு  இருக்கான்.  ம்ம்…. இன்னும் என்ன எழுதி வச்சிருக்கானோ? அடுத்த தடவை வரும் போது விசாரிமா.   நான் வரேன் ...வரம்பா " 

இதைக் கேட்டு கூனிக்குறுகி போகிறாள்  'ஆம் சுவாமி குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் இருந்தவர்'.  

இதன் பிறகு வானதி பேசாமல் இறுகிப் போகிறாள்.

சாப்பாடும் எடுத்து கொள்ள விருப்பமில்லாமல் இருக்கிறாள். இதைப் பார்த்து வாசுவும் வேதனை அடைகிறான்.  வசு வாசுவை "அப்பாவைப் பார்க்கப் போகலாம்.  இப்பொழுதாவது வாங்க" என்று அழைத்துப் போகிறாள்.

பின்னோக்கிய நினைவுகள் 
அறுபடுகிறது  நிகழ்வை நோக்கி......இனி சுவாமியின் மனம் மாறுமோ?  குற்ற உணர்வில் இருந்து வெளியே வருவாளா வானதி


 நடந்து விட்ட கோலங்களுக்கு பரிகாரம் தேடிடுவானா வாசு?'மாற்றம் ஒன்றே மாறாது' என்ற வரிகளுக்கு இங்கு வாழ்வு கிடைக்குமா?

37 comments:

 1. காலம் முழுவதும் மனம் நொந்தே வாழும் ஒரு தியாகியின் வாழ்க்கை மனதை கனக்க வைத்து விட்டது இப்படி உள்ளங்கள் பலர் உண்டு
  அருமை நண்பரே வாழ்த்துகள். - கில்லர்ஜி

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜீ பல அப்பாக்கள் இருக்கிறார்கள் மௌனமாய் வெளியே தெரியாமல்.....

   Delete
 2. மிகவும் நன்று

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே

   Delete
 3. பல வினாக்களை முன் வைக்கின்றது கதை...

  அழகிய நடையில் அர்த்தமுள்ள கதை..
  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே அடையாளமட்டுமல்ல சில நேரம் அப்பவாவின் தியாகங்கள் சரியான பதத்தில் பிள்ளைகளிடம் கொண்டு போய் சேர்க்கும் கடமையும் தாய்க்கு தான் உள்ளது வேறு யார் சொல்வதையும் விட

   Delete
 4. பூவிழி கதை மனதைக் கனக்க வைத்துவிட்டது! ஊரையே சுத்தம் செய்தவரின் மனம் எத்தனை சுத்தமாக இருக்கிறது ஆனால் சுற்றி இருப்பவர்களின் மனங்கள்!!ம்ம்ம்

  கதையை ஏதோ எங்கள் பக்கத்து வீட்டுப் பெண் ஃப்ளாட்டில் நாங்கள் எல்லோரும் கூடும் போது எங்களிடம் வந்து தெரிந்தவர் ஒருவரைப் பற்றிச் சொல்லுவது போலச் சொல்லிச் சென்றிருக்கிறீர்கள். ரொம்ப நல்லா இருக்கு. சிறப்பான கதை. நல்ல கருத்தை, பாடத்தையும் கொண்டுள்ளது.

  பூவிழி இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் அதுவும் கதையின் வரிகளில்....சில கம்ப்ளீட் ஆகாதது போல இருக்கு. கவனம் செலுத்துங்கள் பல சிகரங்களைத் தொடுவீர்கள்! இறுதி வரிகள் எல்லாம் மிக மிக அழகு!!! அருமையா சொல்லிருக்கீங்க. அழகாக கதை சொல்லுவது போல எழுத வருகிறது உங்களுக்கு! வாழ்த்துகள் பாராட்டுகள்! இதுதான் முதல் கதையோ?!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நன்றி கீதா எப்பொழுதும் கற்பனையை எனக்கு நானே பேசி கொள்வேனா அதே போல் வந்துவிட்டு இருக்கிறது எழுத்திலும் ,கவனமுடன் பார்கிறேன்.. இனி சொல்லி கொடுங்கள் நண்பா..... இங்கு பலர் பார்வைக்கு முதல்

   Delete
 5. ஹ்ம்ம் பாவம் சுவாமிநாதன் ...நிஜத்தில் எத்தனையோ இடங்களில் நடக்கும் சம்பவம்தான் ..

  ஆனாலும் வானதி இப்படி செய்திருக்க கூடாது .வாசு பரிகாரம் தேடட்டும் விரைவில் ..

  மனுஷ மனசில் இருக்கும் குப்பையை விடவா குப்பை அள்ளும் வேலை கேவலம் ??
  இங்கே நகை கடை வைத்திருக்கும் ஒரு பஞ்சாபியரின் மனைவி மாலை நேரம் 5-6 கூட்டி பெருக்கி க்ளீனிங் வேலை செய்கிறார்
  நம்மூரில் தான் இளப்பம் ..
  கதை நல்லா இருக்கு பூவிழி .வாழ்த்துக்கள் .

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஏஞ்சலின் ஆதிராவுடன் கலக்கி கொண்டு இருப்பதை படித்து ரசித்து இருக்கிறேன் இங்கு உங்களை காண மகிழ்ச்சி

   Delete
 6. இந்தப் பொருளைக் கதையாக எழுத எடுத்துக் கொண்ட முயற்சிக்கே உங்களைப் பாராட்ட வேண்டும்.

  உங்களைப் போன்றவர்களும் பொழுது போகாமல் எழுத வரவில்லை. எதையாவது எழுத வேண்டுமே என்பதற்காகவும் எழுதுவதில்லை. பல சமூக நிகழ்வுகள் பலரின் பார்வையில் பட்டாலும், பார்த்தும் பாராமல் போகும் பார்வையற்றோர்களின் பார்வையில் படவே எழுதுகிறீர்கள். அதற்காகவே தான் இந்தப் பாராட்டும்! உங்களுக்கும் நன்றாக எழுத வருகிறது. எதற்கு அடுத்து எதைச் சொல்ல வேண்டும் என்று தெரிந்து விஷயங்களைக் கோர்வையாகச் சொல்லவும் வருகிறது. அதனால் எழுதுவதற்கு ஆளில்லாத 'இந்த மாதிரி' கதைகளை நிறையவே எழுதுங்கள். குருட்டுச் சமூகத்தின் விழிகள் திறக்க நிறைய எழுதுங்கள்.. எழுத எழுத எழுத்தும் மெருகேறும்.

  தினமலர் வாரமலர், தினத்தந்தி ஞாயிறு இதழ் போன்ற பத்திரிகைகளுக்கு அனுப்புங்கள். உங்களுக்கான சமூகப்பணி சிறக்கட்டும். வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வாழ்த்து மிகவும் மகழ்ச்சி பேச வார்த்தைகள் இல்லை

   Delete
 7. கதை என்றாலே இப்போது கொஞ்சம் அலர்ஜி ஆனால் பொழுது போகவில்லை என்று இங்கு வந்தால் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன் அருமையான கதை மனதை தொட்டது ..


  ஒரு நல்ல கதை என்பது அதை படித்து முடித்தவுடன் சொல்லமுடியாத படி ஒரு உணர்வு மனதில் தோன்றி அப்படியே நம்மை இருக்க செய்துவிடும் அந்த உணர்வு இந்தகதையை படித்தவுடன் மனதில் தோன்றியது...

  பாராட்டுக்கள் பூவிலிக்கு

  ReplyDelete
  Replies
  1. நண்பா நிஜமாவா? கலாட்டா பேர்வழி உங்களை கவர்ந்தா ? நன்றி நான் பிளாக் வந்ததிலிருந்து எப்போதுமே என் பதிப்புகளை நீங்கள் ஆதரவு கொடுத்துள்ளீர்கள் நன்றி நன்றி

   Delete
 8. நெகிழ வைத்த கதை.. சுவாமினாதன் உன்னத காரக்டர்!! கடமையைச் செய்வதற்கென்றே பிறந்தவர் போன்று...
  வாழ்த்துக்கள் கதாசிரியருக்கு

  ReplyDelete
 9. படிக்கையிலேயே வேதனை தோன்றியது மனதில். அருமையான கரு! அதற்கு உயிர் கொடுத்திருக்கிறீர்கள். சம்பாஷணைகளைக் கொஞ்சம் அதிகரித்து விபரங்கள் தருவதை சம்பாஷணைகளின் மூலமே கொடுத்தீர்களானால் இன்னமும் நன்றாக இருக்கும். எழுதி எழுதிச் செதுக்குங்கள். வித்தை இருக்கிறது உங்களிடம். பழகினால் நன்கு வரும். வாழ்த்துகள். சமூகப் பிரச்னையை முதல் கதை(?) யிலேயே கையாண்ட உங்களுக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சிஸ், முயற்சிக்கிறேன் தோன்றியதை எல்லாம் நானே வைத்து கொள்வேன் எப்போதும்.. இந்த கோணம் கொடுத்தால் நெல்லை தமிழனுக்கு தான் நன்றி சொல்லணும் நான்
   மௌனமாய் அப்பாக்கள் எல்லாம் கதவுகளின் திறப்பு தேவையில்லை என்று வாழ்கிறார்கள்

   Delete
 10. 'நம்ம ஏரியா 'வில் நெல்லை தமிழனால் ஆரம்பிக்கப்படட கருவுக்கு ஒரு முயற்சி செய்து அனுப்பினேன் அதை தளத்தில் பகிர்ந்தது மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது நன்றி பிளாக் ஆசிரியர்களுக்கு

  ReplyDelete
 11. தொடாத கருவை எடுத்துக்கொண்டுள்ளீர்கள். நல்ல வித்தியாசமான முயற்சி. செய்யும் வேலையை வைத்து பிறர் மதிப்பதைக் கொண்டுவந்துள்ளீர்கள். மனது சஞ்சலப்படும் கதை. அதற்கே பாராட்டுகள் பூவிழி.

  என் மனதில் கொஞ்சம் கதையை, வசனங்களைச் செதுக்கியிருக்கலாம். இன்னும் நீங்கள் நினைத்த உணர்வு எல்லோருக்கும் வந்திருக்கும். சமூகப் பிரச்சனையைத் தொட்டதற்கு பாராட்டு.

  எங்கள் கிரியேஷன்ஸ் நிறைய பேர்களை ஊக்குவிப்பதுபோல், அனுபவமிக்க ஜீவி சார், கீதா சாம்பசிவம் மற்றும் பல ஜாம்பவான்களும் ஊக்குவிப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பா... புரிகிறது, கதை பெரிதாக போயிவிடும் என்று நினைத்து சுருக்கிவிட்டேன் சொல்ல வந்ததை...எனக்கும் மிகவும் சந்தோஷமாய் இருக்கிறது இவர்களின் பாராட்டும் ஊக்குவிப்பும்

   Delete
 12. யாரும் தொடாத ஒரு விஷயத்தை தொட்டதற்கே உங்களை பாராட்ட வேண்டும். முதல் கதையிலேயே ஒரு கனமான விஷயத்தை அழகாக ஆண்டிருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஊக்கத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி தோழி

   Delete
 13. அங்கடிபட்டு இங்கடிபட்டு கொம்பியூட்டர் இல்லாமல் மொபைல் மூலம் இங்கு வந்து சேர ஒரு நாள் ஆச்சு.

  பூவிழி... மிக அருமையாக கருவைக் கற்பனையில் வடிச்சிட்டீங்க... யதார்த்தமான கதை... வேதனை கலந்த உண்மை. வாழ்த்துக்கள். முதல் கதையிலேயே கலக்கிட்டீங்க தொடர்ந்து நிறைய எதிர்பார்க்கிறோம் உங்களிடமிருந்து.

  ReplyDelete
  Replies
  1. உங்களை காணோமே என்று நினைத்திருந்தேன்... பார்த்தா இப்படி.. அப்பாவியான இப்படித்தான் இத்தெல்லாம் நமக்கு வேண்டாம் அசத்தல் ஆதிரா போடுங்கோ .... நன்றி நானும் உங்களை பின்பற்றி அழுகாச்சியே கொடுத்துட்டேன்

   Delete
 14. அருமையான இது வரை யாரும் தொடாத கருவை அழகாகக் கையாண்டு இருக்கிறீர்கள்.
  பல் நேரங்களில் பல மனிதர்களின்
  குண நலன் கள். அதில் சுவாமினாதன் ஜொலிக்கிறார்.
  கதைப் போக்கு இயல்பாக இருக்கிறது. மனம் நிறை வாழ்த்துகள் அம்மா.

  ReplyDelete
 15. அருமையான இது வரை யாரும் தொடாத கருவை அழகாகக் கையாண்டு இருக்கிறீர்கள்.
  பல் நேரங்களில் பல மனிதர்களின்
  குண நலன் கள். அதில் சுவாமினாதன் ஜொலிக்கிறார்.
  கதைப் போக்கு இயல்பாக இருக்கிறது. மனம் நிறை வாழ்த்துகள் அம்மா.

  ReplyDelete
 16. super poovizhi
  romba ganamana kadhai
  thannai othukiyavarkum kadaisi varai unmaiyai irrundhavar...
  sometime we all are snobbish in our life.... here vanathi is being snobbish life time

  ReplyDelete
 17. அருமையான கதை பூவிழி.
  உன்னத மனிதைரை புரிந்து கொண்ட வாசுவும், வானதியும் இனி சுவாமியை நன்கு கவனித்துக் கொள்வார்கள் என்று நம்புவோம்.
  நம்பிக்கைதானே வாழ்க்கை.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ...ஆமாம் சிஸ் நம்பிக்கைதானே காத்திருக்க வைக்கிறது .

   Delete
 18. இப்படியும் ஒரு மனைவி.கௌரவம் ஒன்றே பெரியதா. இக்காலத்தில் தண்டனையைக் கடவுள் இந்த ஜென்மத்திலேயே கொடுத்து விடுகிறார். குப்பை கூட்டுவது மட்டுமா, பிணம் தூக்கி குழந்தைகளைப் படிக்க வைத்து முன்னுக்குக் கொண்டு வருபவர்களும் உண்டு. கௌரவம் பார்க்கும் மகன்களும் உண்டு. கடைசிியில் மனம் திருந்துகிரார்களே! அதுவே போதும். உருக்கமான கதை. உணர்ச்சி மயம். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. வாங்கம்மா நன்றி நன்றி

   Delete
 19. Hi.....Poovizhi......சுவாமிநாதன், யோகி இல்லை ,கர்ம யோகி வாழ்க்கை வாழ்கின்றார்....
  தன் வேலையை கொண்டு தன்னை விலக்கி நிறுத்தினாலும், தனது கடமையிலிருந்து விலகாமல்
  வானதி,வாசுவின் நல் வாழ்க்கைக்கு உழைக்கிறார்....கட்டுபாடு,கண்ணியத்துடன்....
  காலம் கடந்து திருந்தினாலும், வானதியின் குற்ற உணர்ச்சி வாழ்நாள் வரை தொடரும்..
  மௌனமாக இருந்த அப்பா,மகன் உறவு பேசிக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளது..
  எப்படியோ, அவரின் வயதான காலத்திலாவது அவருக்கு அனுசரணையாக இருந்தால் சரி...
  உயிரோட்டமுள்ள கதை....பூவிழி.....வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 20. வாங்க, நன்றி.. ஆம் ஆறினாலும் தங்கிவிட்ட வடுவாய் இருக்கத்தான் இருக்கும்

  ReplyDelete