புதன், 31 அக்டோபர், 2018

வட்ட வட்ட தோசை சுட்டு ....


தோசை ஏன் வட்டமா இருக்கு ? யாரும் சதுர தோசை சுட முயற்சிக்கல்லியா ? கேள்வி கேட்டவர் ஏஞ்சல். 

பதிலும், கதையும் இங்கே!

=======================================

தோசை, முதலில் சதுர வடிவமாகத்தான் இருந்தது. 

காரணம் என்ன என்றால், தோசைக்கல் செய்கின்ற தொழிலாளி, இரும்பை செஞ்சூடு பதத்திற்குக் கொண்டுவந்து, தோசைக்கல் உருவாக்கும்பொழுது, எவ்வளவு முயன்றாலும் அதை ஒழுங்கான வட்ட வடிவிற்கு கொண்டுவர இயலாது. ஆனால், சதுர வடிவாக சுலபமாக, தட்டித் தட்டி உருவாக்க இயலும். 

Simple anvil and hammering work.

  
(சதுர தோசைக்கல்லில், சதுர தோசை வார்ப்பது சுலபம். )

=================

இது சம்பந்தமாக, இதோ ஒரு கற்பனைக் கதை! 

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ரஷ்யாவிலிருந்து அதிரானா மியாவ்ச்காவ் என்னும் ரஷ்ய உணவு விஞ்ஞானி, அங்கே விளைந்த உளுந்தாவ்ச்காவ் என்னும் தானியத்தை நிறைய எடுத்துக்கொண்டு, பெரும்பயணமாக, சோழ நாட்டில் உள்ள இட்டளியூர்  என்னும் ஊருக்கு வந்தார்.  இட்டளியூரில்  நெல் நிறைய விளையும். அந்த ஊர்,  இருந்த குறுநிலம் இட்லிபுரி. இட்லிபுரியை ஆண்டு வந்த மன்னனின் பெயர் சோற்று மாக்கான். 
அதிரானா மியாவ்ச்காவ், சோற்று மாக்கானைப் பார்த்து, தோசை (அப்போ அதற்கு, அதிரானா வைத்த பெயர் தோச்காவ் என்பதாகும்) செய்யும் முறை பற்றி எடுத்துக் கூறி, பரிசு பெற்றுச் செல்ல வந்திருந்தார்.   

அதற்கு முன்பு, தான் கண்டுபிடித்த பலகாரத்தை, sample production செய்து பார்க்க எண்ணி, இரும்பு வேலை செய்யும் தொழிலாளியிடம், தனக்கு வட்ட வடிவ இரும்புக் கல்  வேண்டும் என்று கேட்டிருக்கிறார். எதற்கு என்று கேட்ட இரும்புத் தொழிலாளியிடம், முழு விவரங்களையும் கூறினார் அதிரானா. 

அந்த இரும்புத் தொழிலாளி, அதிரானாவின்  காலில் விழுந்து, " ரஷ்ய விஞ்ஞானி அவர்களே! என்னைக் காப்பாற்றுங்கள். உங்கள் கண்டுபிடிப்பான தோசை என்பதை, தயவுகூர்ந்து, சதுர வடிவமானது என்று மன்னருக்கு அறிமுகம் செய்யுங்கள். வட்ட வடிவில் ஆனது என சொல்லிவிட்டால், வட்ட தோசைக் கல்  வேண்டும் என்று அரண்மனை தொடங்கி, ஆண்டிகள் மடம் வரை எல்லோரும் ஆர்டர் தருவார்கள். தட்டிக் கொட்டி, ஒரு சரியான வட்டக் கல் உருவாக்கும் நேரத்தில், பன்னிரண்டு சதுர தோசைக்கல்  என்னால் சுலபமாக உருவாக்க முடியும். என்னுடைய புரோடக்டிவிடியை இம்ப்ருவ் செய்ய நீங்க உதவுங்க" என்று கேட்டுக்கொண்டார். அதோடு, அதிரானாவுக்கு ஒரு சதுர வடிவ தோசைக்கல்லை செய்து கொடுத்து, அதனுடைய அடிப்பக்கத்தை, (நெருப்புப்பக்கம்) அடையாளம் கண்டுபிடிக்க, சிவப்பு வர்ணம் அடித்துக் கொடுத்தாராம். 

(அதை ரஸ்யாவுக்குக் கொண்டுபோன அதிரானா, அதை வைத்த இடம்தான்  தற்காலத்தில் RED SQUARE - MOSCOW என்று அழைக்கப்படுகிறது.) 

அதிரானாவும் இதற்கு ஒப்புக்கொண்டு, சோற்று மாக்கானிடம் தோச்காவ் செய்முறை பற்றி விளக்கமளித்தபோது, சதுர வடிவாகவே செய்து காட்டினார். 

மிகவும் சந்தோஷமடைந்த சோற்று மாக்கான், அதிரானாவிடம், "ரஷ்ய விஞ்ஞானியே! உங்கள் கண்டுபிடிப்பு, அதி அற்புதமானது! நிறைய பரிசுகளை, படகில் ஏற்றி, தேம்ஸ் நதி வழியாக உங்க ஊருக்கு அனுப்புகிறேன். இனி வருகின்ற ஜன்மங்களில் எல்லாம், நீவிர் விஞ்ஞானி, செஃப், ஞானி என்று போற்றப்படுவீர்" என்று புகழ்ந்துரைத்தான். 

===========================

அது சரி, அப்புறம் சதுர வடிவ தோசை எப்போது வட்ட வடிவமானது?

சோற்று மாக்கான், தன் அரண்மனை சமையல்காரனான, அச்சுதனை அழைத்து, அதிரானா சொன்ன முறைப்படி, தோசைகள் வார்த்துக் கொடுக்கச் சொன்னான். அச்சுதன், அவ்வாறே அரிசி உளுந்து ஊறவைத்து, ஐந்து மணிநேரம் கழித்து அதனை அரைத்து, உப்புச் சேர்த்து, எண்ணெய் தடவி, முறுகலாக சதுர தோசைகள் செய்தான். 

அரசன் சாப்பிடுவதற்கு முன்பு, தோசை என்னும் அந்த வஸ்து சுவை எப்படி இருக்கின்றது என்று பார்க்க, அச்சுதன் சதுர தோசையின் ஒரு கார்னரைக் கிள்ளி வாயில் போட்டுக்கொண்டான். 'ஆஹா ! என்ன சுவை, என்ன சுவை.' இன்னும் ஒரு கார்னர், இன்னொரு கார்னர் என்று நான்கு கார்னர்களையும் சாப்பிட்டுவிட்டான். இப்போ தோசை கார்னர்கள் இழந்து, வட்டவடிவமாகி விட்டது. 

எல்லா தோசைகளின் கார்னர்களையும் கபளீகரம் செய்த அச்சுதன், வட்ட வடிவ தோசைகளை, மன்னனிடம் கொண்டு சென்று கொடுத்தான். 

சோற்று மாக்கான், "அச்சுதா ! ஏன் சதுரவடிவில் தோசை வார்க்கவில்லை? " என்று கேட்டான். 

அச்சுதன் அதற்கு, "மன்னர் மன்னா - இதுதான் வார்க்க சுலபமான வடிவம், சுவையும் அதிகமாக இருக்கும்" என்றான். 

சோதித்துப் பார்த்த சோற்று மாக்கான், " ஆம்! உண்மைதான்! என்ன சுவை, என்ன சுவை " என்று பாராட்டினான்! 

இனி தனக்கு அளிக்கப்படும் தோசைகள் வட்டவடிவிலேதான் இருக்கவேண்டும் என்று ஆணையிட்டான். 

அதோடு முடிந்துவிட்டதா கதை?

இல்லையே! 

அச்சுதனுக்கு, அஞ்சலி என்று ஒரு தங்கை. அச்சுதன் தோசை கார்னர்களைக் கபளீகரம் செய்ததைக் கண்ட அஞ்சலி, தனக்கும் சில கட்டிங் வேண்டும் என்று கேட்டாள். தரவில்லை அச்சுதன். அப்புறம் என்ன? சோற்று மாக்கானிடம் போட்டுக்கொடுத்துவிட்டாள் அஞ்சலி. 

சோற்று மாக்கான் அச்சுதனை இழுத்து வரச் சொல்லி, விசாரணை செய்தான். அச்சுதன் உண்மையை ஒப்புக்கொண்டான். 

அச்சுதனை மன்னித்து அனுப்பிய சோற்று மாக்கான், அன்று முதல், தோசைகள் வட்ட வடிவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டான். வட்ட வடிவில் இருக்கும் தோசையின் எந்த ஓரத்திலும், யாரும் ஒரு துளி தோசை கூட, தடயம் இல்லாமல் பிய்த்துத் தின்றுவிடமுடியாது என்பதால்தான் சோற்று மாக்கான் இந்த சட்டம் போட்டான். 

அந்தக் காலத்தில் தோசைக்கல் சதுர வடிவில் இருந்தாலும், தோசைகள் வட்ட வடிவில் இருந்ததற்கு இதுவே காரணம்! 

============================================