திங்கள், 5 நவம்பர், 2018

'கௌ'லாப் ஜாமூன்.இது என்னுடைய கண்டுபிடிப்பு. Gou_Lab Jamoon. 

நீங்களும் செய்து, சுவைத்துப் பாருங்கள். 

தேவையான பொருட்கள் :

பொட்டுக்கடலை:  100 கிராம்.

(Nestle Everyday போன்ற ) பால் பவுடர் : 100 கிராம்.

ஏலக்காய் : பத்து எண்ணிக்கைகள். 

தயிர் : ஆறு தேக்கரண்டி. 

சர்க்கரை : ஒரு கப். 

சுத்தமான தண்ணீர் : ஒரு கப். 

நல்லெண்ணெய் : 100 மி லி +

தயார் செய்யும் நேரம் : அதிகபட்சம் முக்கால் மணி நேரம்.

==================================

முதலில், ஏலக்காய்களை உரித்து, அதன் உள்ள கருப்பு நிற அரிசிகளை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டுக்கொள்ளுங்கள். 

பொட்டுக்கடலையை, ஏல அரிசி சேர்த்து, மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். 

பொட்டுக்கடலை மாவு ஒரு கப், பால் பவுடர் ஒன்றேகால் கப் (NOTE : BY VOLUME is mentioned here. So take the powders accordingly, from the powders you have.)  என்ற அளவில் இரண்டு மாவையும் சேர்த்து, நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். தண்ணீர் சேர்க்கக்கூடாது. 

நன்றாகக் கலந்த கலவையை, சிறிது சிறிதாக தயிர் சேர்த்து, பிசையுங்கள். எச்சரிக்கை : தயிரை சிறிது சிறிதாகக் கலக்கவேண்டும். இல்லையேல் கலவை தோசைமாவு பதத்திற்குப் போய்விடும். நமக்கு வேண்டியது, சப்பாத்தி மாவு பதம். இந்தப் பதம் வந்ததும், மாவுக் கலவை, கை விரல்களில் ஒட்டிக்கொள்ளும். கவலைப் படவேண்டாம். கலவையை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். 

இப்போ இரும்புச் சட்டியை காஸ் ஸ்டவ் சிறிய பர்னர் மேல் ஏற்றி, ஸ்டவ்வைப் பற்றவைத்து, இரும்புச் சட்டியில், நல்லெண்ணெய் ஊற்றவும். 

எச்சரிக்கை : எண்ணெய் அதிகம் சூடாகிவிடக்கூடாது. காஸ் ஸ்டவ்வை சிம்மர் நிலையிலேயே எரியவிடுதல் அவசியம். 

எண்ணெய் பொரிக்கின்ற அளவுக்கு சூடானதும், அதில் பொ.க.மா + பா ப + த கலவையை, கையில், சூடு இல்லாத (!) சாதாரண நல்லெண்ணையை (மாவு கையில் ஒட்டாமல் இருப்பதற்காக ) விரல்களில் தொட்டுக்கொண்டு, மொழு மொழுவென்று சிறிய உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் ஒவ்வொன்றாக சிவக்கப் பொரித்து எடுக்கவும். எச்சரிக்கை : உருண்டைகள் கிட்டத்தட்ட பத்து நொடிகளுக்குள் வெந்து உப்புச் சீடை கலருக்கு வந்துவிடும். (அதிக நேரம் எண்ணெயில் பொரிந்தால், சீடை கலர் போய், சிவந்து, அதற்கப்புறம் பழுப்பு நிறம், பின் கருப்பு நிறம் ஆகிவிடும். அந்தக் கருப்பு வண்ண கௌலாப் ஜாமூன்களை அப்பாவிக் கணவர்கள் மட்டுமே சாப்பிடுவார்கள் என்பதை அறியவும்

எண்ணெய் அதிகம் சூடாகிவிட்டால், அவ்வப்போது, ஸ்டவ்வை ஆஃப் செய்து பொரிக்கும் வேலையைத் தொடரவும். 

******
ஊசிக் குறிப்பு : 
====> தயிர் சேர்த்து மாவு பிசைதலும், கலவை உருண்டைகளை எண்ணெயில் பொரித்து எடுப்பதும் மிகவும் கவனமாகச் செய்யவேண்டிய விஷயங்கள்.
******

அப்புறம் ஜீரா ரெடி செய்வது உங்கள் எல்லோருக்கும் நன்கு தெரிந்த விஷயம் 

ஒரு பங்கு (By Volume - not by weight) தண்ணீர் - உதாரணமாக நூறு மி லி தண்ணீரில்  நூறு மி லி சர்க்கரை சேர்த்து, அடுப்பில் குறைந்த தீயில், சூடாக்கவும். சர்க்கரை எல்லாம் கரைந்தவுடன், ஜீராவை அடுப்பிலிருந்து இறக்கவும், (எச்சரிக்கை : ஜீராவை அதிக நேரம் அடுப்பில் வைக்கக்கூடாது. கம்பிப்பதம், பாகுபதம் எல்லாம் தேவை இல்லை. ) சூடாக இருக்கும்போதே அதில், பொரித்து வைத்துள்ள உருண்டைகளைப் போடவும். அவ்வளவுதான். மேட்டர் ஓவர். 

அந்த கௌலாப் உருண்டைகள், ஆறு / ஏழு மணி நேரமாவது ஜீராவில் ஊறட்டும். 

நீங்க போய் சீரியல் பாருங்க. 

பிறகு கௌலாப் ஜாமூன் எப்படிச் சாப்பிடுவது என்று உங்களுக்கு எல்லாம் சொல்லாமலே தெரியுமே! 

செய்து பார்த்து, சுவைத்துப் பார்த்து எழுதி அருளியவர் : கௌதமன். 

நன்றி!

இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்!

=============================================